Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

சமீபத்தில் நான் எடுத்த நேர்காணலில் (சொல்வனத்தில் வெளியாகியுள்ளது), வித்வான் டி.ஆர்.சுப்ரமணியம் அவர்கள் சிதம்பரம் இராதாகிருஷ்ணன் பிள்ளையைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

அந்தச் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே யுடியூபில் இராதாகிருஷ்ணன் பிள்ளை வாசித்த ‘ஆலய மரபு’ பதிவு ஆண்டான்கோயில் சங்கீத நாதம் தளத்தில் காணக் கிடைத்தது. அடஹிப் பற்றி இன்று என் தளத்தில் வெளியாகியுள்ள ‘அங்கும் இங்கும்’ பகுதியில் பேசியுள்ளேன்.

இதை வெளியிட அனுமதியளித்த Andankoil Avs Sivakumar அவர்களுக்கு நன்றி.

சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் பதிவை எழுதியிருந்தேன்.

===================

ஒரு நவராத்ரியில் பரிவாதினியின் வருடாந்திர கச்சேரிகள் வைத்திருந்தோம். தொடரின் முத்தாய்ப்பாய் பாச்சா ஸாரின் வீணை கச்சேரி.

மேடையில் அமர்ந்து ஒலிஅமைப்பை எல்லாம் சரி பார்த்து, இப்போது திரையை விலக்கிவிடலாம் என்று நான் நினைக்கும்போது என்னை அருகில் வருமாறு சைகை காட்டினார் பாச்சா ஸார்.

“நவராத்ரி கச்சேரி இது. அதுக்காக முழுசா அம்பாள் பாட்டா வாசிக்கணும்னு எல்லாம் தயார் பண்ணிண்டு வரலை. அம்பாளானாலும், பெருமாளானாலும் எனக்கு எல்லாம் ராகம்தான். ராகம்தான் அம்பாள். ராகம்தான் பெருமாள். பரவாயில்லைதானே?”

எனக்கு பதில் சொல்ல வாயெழவில்லை. அவர் வந்து உட்காந்து ஷட்ஜத்தை சேர்த்தாலே எனக்கு சிலிர்த்துவிடும். வேகமாக தலையாட்டிவிட்டு மேடையிலிருந்து இறங்கி இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

“மா….”

தந்தி இழுப்பில் முன்னும் பின்னுமாய் அவசரமே இல்லாமல் கம்பீரமாய் ஊஞ்சலாடும் அந்தப் ப்ரதி மத்யமம்!

நொடிப் பொழுதில் அரங்கு முழுவதும் பரவிப் பெருக்கெடுத்த பிரதி மத்யமம்.

”பாச்சா ஸார்! அம்பாள் வந்துவிட்டள்! இதோ தெரிகிறாளே பிரதி மத்யமத்தில்”, என்று உலகுக்கே கேட்க கத்த வேண்டும் என்று வேகம் எழும்போதே மேல் ஷட்ஜத்தைத் தொட்டும் தொடாமலும் கொஞ்சிக் குலவும் அந்த ஹம்ஸநாத நிஷாதம்!

அடுத்த பன்னிரெண்டு நிமிடங்களுக்கு உலகின் அத்தனை உருவிலும் கொலுவிருக்கும் அன்னையின் எத்தனை தரிசனங்கள்!

ஆமாம்! தரிசனமேதான்! உள்ளும் புறமுமாய் எத்தனை தரிசனங்கள்!

அத்தனைக்கும் நன்றி பாச்சா ஸார்!

இன்னும் ஒரு நூற்றாண்டு நீங்கள் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

=====================

இன்று எதையோ தேடப் போய் என் சேகரத்தில் அந்தக் கச்சேரி கண்ணில் பட்டது. ஹம்ஸநாதத்தை உடனே என் தளத்தில் வலையேற்றிவிட்டேன்.

யாம் பெற்ற இன்பம்.

வாழ்க பாச்சா சார் புகழ்.

பரிவாதினி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை (விழாத் தேதி மே மாதம் 11-ம் நாள்). சாதனையாளரைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விருதைத் திரு. டி.ஆர்.சுப்ரமணியம் அவர்களுக்கு வழங்குகிறோம் என்று சொன்ன உடனேயே எண்ணற்ற மகிழ்ச்சிக் குரல்கள் இணையமெங்கும் ஒலித்தன.

அந்தக் குரல்கள் கொடுத்த உற்சாகத்தில் திளைத்துக் கொண்டே, இன்னொரு விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர முனைகிறேன்.

இசைக் கலைஞர்களின் வாழ்க்கை கைத்தட்டல்களாலும், பொன்னாடைகளாலும் சூழ்ந்திருந்தாலும் பொருளாதாரப் பின்புலத்தில் நோக்கும் போது எண்ணற்ற உசலாட்டங்களை அடக்கியது. மிகத் தேர்ந்த கலைஞருக்குக் கூட தொழிலின் உச்சம் என்பது 20-25 ஆண்டுகளுக்குத்தான். காலச் சுழற்சியில் உச்சாணியில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்து அதிகம் வெளிச்சம்விழா இடத்தில் நிழல்தட்டிப் போவது நிதர்சனம். முதுமையும், முதுமையிலும் கற்ற கலையைக் கொண்டு பொருள் ஈட்ட வேண்டிய நிர்பந்தமும் உள்ள கலைஞர்கள் ஏராளம். கலைஞனின் வாழ்க்கையில் இந்தப் பக்கங்களை விஸ்தரித்து எழுதுவது நாராசம்.

இதை மனத்தில் கொண்டு உங்களுக்கொரு விண்ணப்பத்தை வைக்கிறேன். வாழ்நாள் சாதனையாளரைக் கொண்டாடுவதை புகழுரைகள், பட்டுப் பொன்னாடைகள், பலத்த கரகோஷங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், கலைஞனின் எஞ்சிய வாழ்நாளை சுமைகளூள் சிக்கி அமிழ்ந்து போகாமல் இருக்க நம்மால் ஆனதைச் செய்ய உங்களை அழைக்கிறேன்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd4uV7Kd1UFr5lo2yl_uE2ZtM0hi2BByEHiH3eWXv2tblGVxA/viewform

மேலுள்ள படிவத்தில், வரும் 11-ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியின் விவரங்கள் உள்ளன. அன்று நடக்க உள்ள விருதளிப்பு விழாவையோ, அதன் பின் நடக்கவுள்ள முன்னணி கலைஞர்கள் வாசிக்கும் கச்சேரியையோ நேரில் அனுபவிக்க நுழைவுச் சீட்டு விற்றுக் கட்டணம் வசூலிக்க எந்த எண்ணமும் இல்லை.

இந்த விழாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மகாவித்வான் டி.ஆர்.சுப்ரமணியத்தை கௌரவிக்க நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் அந்தப் படிவத்திலேயே அவர் வங்கிக் கணக்குக்கான QR Code உள்ளது. உங்களால் இயன்ற, உங்களுக்குச் சரியான கௌரவம் என்று தோன்றும் ஒரு தொகையைச் செலுத்தி அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அதற்கான நன்றியாய் விழாவுக்கான நுழைவுச் சீட்டு உங்களுக்கு பரிவாதினியின் சார்பிலிருந்து வந்து சேரும்.

இதைச் சொல்வதால் 11-ம் தேதி அரங்கு வாசலில் நாங்கள் நுழைவுச் சீட்டைப் பரிசோதித்து உங்களை அரங்குக்குள் அனுமதிக்கப் போகிறோம் என்றில்லை. இதுவொரு நன்றி நவிலல் மட்டுமே.

தேர் கிளம்ப நேரம் குறித்தாகிவிட்டது. இனி ஊர்கூட வேண்டும்.

அன்புடன்
லலிதாராம்
சுவாமிமலை சரவணன்
பி.கு: படித்தவர்கள் பகிருங்கள். அதிகம் பேருக்குக் இதில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொண்டு சேருங்கள்.

இந்தத் தொடரில் மூன்றாவது பாடலாக மஹாவித்வான் தருமபுரம் கோவிந்தராஜன் அவர்களின் வர்ணங்களில் ஒன்றை வழங்குகிறோம்.

ரிஷபாஷ்டராகமாலிகை.

ராக மாலிகை என்றால் ராகங்களின் மாலை.

அஷ்ட ராகமாலிகையில் எட்டு ராகங்கள் வரும்.

இந்த வகையில் எட்டு ராகங்களுடன் ராகமாலிகையை பலர் அமைத்திருக்கிறார்கள்.

இந்த ராகமாலிகையில் தனித்துவமாக ‘ரிஷப’ ஸ்வரத்தை மையமாக வைத்து எட்டு ராகங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியின் எடுப்பும் ரிஷபத்தில் தொடங்கியுள்ளது. கடைசி பகுதியில் வரும் நான்காவது முக்தாய் ஸ்வரத்தில் மத்யமாவதி ராகத்தில் குறைப்பு பாடுவது போன்ற அமைப்பும். அதில் உள்ள கதிபேதமும் அறிவையுக் கவரும் வேளையில் மனத்தையும் தொடும் வகையைச் சேர்ந்தவை.

அதிகம் கேகப்படாத வர்ணமான இதை நமக்காக நாகஸ்வர வித்வான்கள் Cinnamanur Karthi-யும் Prakash Ilayaraja-வும் பாடி வழங்கியுள்ளார்கள். அவர்கள் வாசிப்பு, ஆசிரியர் பணி இரண்டுக்குமிடையே இந்தப் பதிவை அவர்கள் நமக்காக செய்து கொடுத்துள்ளார்கள். முதல் பதிவின் இடைப்பகுதியில் துரதிர்ஷ்டவசமாய் சில தடங்கள் ஏற்பட்டதால், இரண்டாம் முறையாக அதன் தொடர்ச்சியை பதிவு செய்து உள்ளனர். இவை ஸ்டுடியோவில் செய்த பதிவுகள் அல்ல. அதனால் இடம், பதிவு செய்த கருவி ஆகியவற்றால் ஒலியில் நீங்கள் சில வெறுபாடுகளை உணரக் கூடும். அதற்கு நாங்கள் வருந்தினாலும், இதனால் உங்கள் ரசிகானுபவத்துக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்பதற்கு நான் உத்தரவாதம்.

இந்தப் பாடலை ரசிக்கும் வேளையில் நமக்கிருக்கும் ஒரு கடமையையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். வெளியாகியுள்ல இந்த 25 வர்ணங்களிள் புழக்கத்தில் இல்லாதனவற்றை பதிவு செய்யவும், இதுவரை வெளி வராத கோவிந்தராஜ பிள்ளை அவர்களின் கீர்த்தனங்கள், பல்லவிகள், மல்லாரிகள் முதலானவற்றை வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை இசைக் கலைஞர்களுக்கும், நிறுவனங்களுக்கும், ரசிகர்களுக்கும் இருக்கிறது.

இறையருளில் அது நடக்கு என்று நம்புகிறேன்.

இன்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்.

அவர் நடித்த ஷ்யாமளா படத்தில் உள்ள இரு பாடல்களைப் பற்றி பேசியுள்ளேன். அவற்றுள் ஒரு பாடலைக் கேட்கவும் செய்யலாம்.

இணையத்தில் ஒரு வரி – பாகவதரின் புகழ்பெற்ற ராஜன் மகராஜனைப் பற்றி ஒரு கொசுறு செய்தியாய் கண்ணில் பட்டது. அந்தப் பாடலில் வாசித்த வீணை வித்வான் ராகவன் பெயர், அந்தப் பாடலின் கிராம்ஃபோன் இசைத்தட்டில் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று பாகவதர் வலியுறுத்தினார் என்கிற ஒற்றை வரிச் செய்தியது.

நம் காலத்தின் பொக்கிஷமான வீணை ஆர்.பார்த்தசாரதி (பாச்சா ஸார்) அவர்களின் தந்தையாராகத்தான் இருக்க வேண்டும் என்ற யூகத்தில் அவரை அழைத்தேன். அவர் மிகுந்த உற்சாகத்துடன் அந்தப் பாடல் பதிவைப் பற்றி பேசினார்.

“பாகவதர் இந்தப் பாடலைப் பாட நிறைய நாட்கள் சாதகம் செய்து வைத்திருந்தார். பாடலில் வாய்ப்பாட்டும் வீணையும் மாறி மாறி இசைக்கும் நெடிய ஸ்வரப்ரஸ்தாரப் பகுதி இருப்பதால் பல நாட்களுக்கு வீணையுடன் சேர்ந்தும் ஒத்திகை செய்ய வேண்டியிருக்கும் என்று பாகவதர் நினைத்திருந்தார். என் தந்தையார் பாகவதர் பாடியதை எல்லாம் வெகு சீக்கிரத்திலேயே கிரகித்து உடனுக்குடன் இம்மி பிசகாமல் வாசித்துவிட, சீக்கிரத்திலேயே பாடல் பதிவு முடிவடைந்துவிட்டது. என் தந்தையாரின் வாசிப்பைப் பார்த்து பாகவதருக்கு பெரும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும். உடனே என் தந்தையாருக்கு தன் கையிலிருந்து ஒரு தொகையையும் அளித்து, படத் தயாரிப்பாளரிடம் சொல்லி வழக்கத்தைவிட அதிக சன்மானம் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அதனுடன் நிற்காமல் அவர் செய்தது அனேகமாக இசைப் பதிவு வரலாற்றில் முதமுறை எனலாம். பாடலின் கிராமஃபோன் ரிக்கார்டிலும் வீணை வாசித்த கலைஞரின் பெயரும் இடம்பெற்றே ஆகவேண்டும் என்று வலிந்து சென்று செய்தும் காட்டினார். ‘ராகவன்’ என்ற பெயர் இடம்பெற்ற ரிக்கார்ட் பலநாட்களுக்கு எங்கள் வீட்டில் இருந்தது. இந்தச் சம்பவத்தை என் அப்பா, அம்மா இருவரும் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.”

பாகவதரின் காந்தக் குரலொடு அவருடைய விசால மனத்தையும் அவர் பிறந்த நாளில் எண்ணித் திளைப்போம்.

இன்று மேண்டலின் ஸ்ரீநிவாஸின் 55-வது பிறந்த நாள்.

சமீப காலமாய் இந்த நாள் கலவையான உணர்வை எனக்குள் எழுப்புகிறது. ஒரு பக்கம் ஸ்ரீநிவாஸின் இசை என் வாழ்வை நிறைத்த கணங்களின் கதகதப்பு. இன்னொருபுறம் அவர் இல்லாததன் வெறுமை.

வெறுமையையும் மீறி கொண்டாடத்தான் வேண்டும் அந்த அவதார புருஷனை.

இன்று அவர் வாசித்த தோடி ராகப் பதிவை பகிர நினைத்தேன். முன்னொட்டாய் கொஞ்சம் பேச எண்ணினேன். பலவகை உணர்வுகள் எழுந்து அலைகழிப்புக்கு நடுவில் தெளிவில்லாமல் ஆனால் நிறுத்தாமல் 15 நிமிடங்கள் பேசினேன். இன்னும் கூட பேசி இருப்பேன். இதுவே அதிகம் என்று தோன்றியதால் நிறுத்துக் கொண்டேன்.

பேசி முடித்ததும், பேசியதை நீக்கிவிட்டு தோடி ராகப் பதிவை மட்டும் போடலாமா என்று தோன்றியது. கோவையாக இல்லாவிட்டாலும் சத்தியம்தானே – இருந்துவிட்டுப் போகட்டும் என்று நான் பேசியதையும் சேர்த்துப் பதிவேற்றியுள்ளேன்.

யுடியூப் தானே – நான் பெசியது அலுப்புத்தட்டினால் நேராக தோடி ராகத்துக்கு சென்றுவிடுங்கள்.

வாருங்கள் கொண்டாடுவோம்!

நேற்று (18/2) திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளையின் நினைவு தினம். அவர் நினைவில் ஒரு 78 ஆர்.பி.எம் பதிவு.

இன்று தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள். அதையொட்டி என் யுடியூப் தளத்தில் முனைவர் ப.சரவணன் தொகுத்து, காலச்சுவடு வெளியிட்டிருக்கும் உ.வே.சா-வின் இசைக் கட்டுரைகள் தொகுப்பைப் பற்றி பேசியுள்ளேன்.

இதைத் (இதையும் மற்ற உ.வே.சா சம்பந்தமானவற்றையும்) தொகுக்க எவ்வளவு உழைத்திருப்பார் என்று உணரமுடிகிறது. அதற்காக சரவணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இசை ரசிகர்களாக, மாணவர்களாக இந்தத் தொகுப்பைக் கொண்டு பல புதிய கேள்விகளை எழுப்பி – உரையாடல்களை உருவாக்கி விடைகளை நோக்கிச் செல்வதற்கான கடமை நமக்குண்டு.

இன்று தவில் மேதை கலியமூர்த்தி அவர்களின் நினைவு நாள்.

ஆகச் சிறந்த வித்வான்கள் பலரை என்னால் கேட்க முடிகிறதே தவிர, அவர்களைப் பார்க்கக் கூடிய பேறு அமையவில்லை. அப்படி நான் பார்க்கக் கொடுத்து வைத்த மேதைகளுள் வித்வான் கலியமூர்த்தி ஒருவர்.

அவர் வாசிப்பதிருக்கட்டும். அவர் வந்து அமர்ந்தாலே களை கட்டிவிடும். தலையை அசைத்து அசைத்து அவர் ரசித்து ரசித்து வாசிக்கும் காட்சி கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அவர் நினைவாக ஒரு பதிவை இன்று வலையேற்றியுள்ளேன்.

ஒரு நண்பர் என்னிடம் உள்ள நாகஸ்வர பதிவுகளில் நாட்டைகுறிஞ்சி பதிவுகளைக் கேட்டிருந்தால். என் யுடியூப் தளத்தில் மூன்று பதிவுகளை ஏற்றியுள்ளேன்.

1. இலங்கையில் பதிவான காருகுறிச்சி அருணாசலத்தின் அரிய பதிவு.

2. வேதாரண்யம் வேதமூர்த்தியின் ரேடியோ கச்சேரி.

3. சென்னையில் இசை ரசிகர் நாகேஸ்வரன் வீட்டு புதுமனை விழாவில் இஞ்சிக்குடி சுப்ரமணியம் வாசித்தது.

இம்மூன்றுமே என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவை. தளர்ந்த சமயங்களில் மனத்தில் புத்துணர்வை எழுப்புபவை.

யாம் பெற்ற இன்பம்.

கேட்காத பாட்டெல்லாம் – 2
+++++++++++++++++++++++++

இந்தத் தொடரில் இரண்டாவது பாடலாக மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் தோடி ராகப் பாடல் – காமிதே காருணான்விதே.

இந்தப் பாடலுக்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

1931-ல் சங்கீத வித்வத் சபை ஒரு போட்டியை அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில், நல்ல இசையோடும் பொருளோடும் பாடல்கள் வருவது சற்றே மங்கியிருந்ததால், அதை மாற்றும் நோக்கில் ஒரு போட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் வாகேயக்காரர்கள் ஒரு பாடலை உருவாக்கி கலந்து கொள்ளலாம். பாடல் ‘பாரதத்தைப்’ பற்றி இருக்க வேண்டும். பாரத நாட்டை ஒரு தேவதையாக உருவகம் செய்து பாடலைப் புனைய வேண்டும். பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து பாஷைகளில் ஒன்றாக இருக்கலாம்.

1931-ம் ஆண்டு அக்டோபர் மாத அகாடமி ஜர்னலில் இதற்கான விவரங்கள் உள்ளன. முதலில் இந்தப் போட்டிக்கு போதுமான அளவு பங்களிப்பு வரவில்லை என்றும், போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதியை நீட்டித்த போதும் அதிகம் பேர் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வளவு குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் இந்தப் போட்டியை நடத்திவிட வேண்டும் என்று அகாடமி தீர்மானித்துள்ளது. கடைசியில் 20 பாடல்கள் போட்டிக்கு வந்துள்ளன. அவற்றை ஒன்பது போட்டியாளர்கள் சமர்ப்பித்து உள்ளார்கள். தமிழ், தெலுன்ப்க்கு, சமஸ்கிருதம் – ஆகிய மொழிகளில் பாடல்கள் வந்துள்ளன.

வந்த பாடல்களை, டைகர் வரதாசாரியார், டி.எல்.வெங்கட்ராம ஐயர், ஜலதரங்கம் ரமணய்ய செட்டியார், ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து பரிசீலித்திருக்கிறார்கள்.

வந்த பாடல்களுள் இரன்ம்டு பாடல்கள் மட்டுமே அவர்கள் அளவுகோல்படித் தேரியதாய் அறிக்கைத் தெரிய வருகிறது, அந்த இரண்டு பாடல்களையுமே செய்தவர் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிதான். அவ்விரண்டு பாடல்களுமே சமஸ்கிருதப் பாடல்கள்.

‘காம மந்திரத்தில்’ தம்புரா ஸ்ருதியுடன் நடுவர்கள் முன் அந்தப் பாடல்களைப் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி பாடிக் காண்பித்துள்ளார். இரண்டுமே நல்ல பாடல்கள் என்றும், பரிசு தோடி ராகப் பாடலுக்கு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரங்களும் பாடலின் ஸ்வர சாஹித்யக் குறிப்பும் மேற்சோன்ன அகாடமி ஜர்னலில் இருந்து வந்தாலும், இந்தப் பாடல் கச்சேரிகளில் புழக்கத்தில் இல்லை.

இதைப் பதிவு செய்ய விதுஷி Bharathi Ramasubban-ஐ அணுகினேன். அவர் அரும்பாடு பட்டு பாடம் பண்ணி பாலைப் பதிவு செய்து அனுப்பினார்.

கேட்காத பாடல் – இன்று உங்களுக்காக என் யுடியூப் தளத்தில்.

அற்புதமான தோடியை நாம் ரசிக்கக் கொடுத்த பாரதிக்கும், பாடலை சாஹித்யத்துடன் கண்டு ரசிக்கும் படி காணொளியை அமைத்துக் கொடுத்த விதுஷி ஸ்ரீவித்யா ராமநாத்துக்கும் என் நன்றிகள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

முருகபூபதியாரின் 110 வது பிறந்த நாள் கொண்டாட்டப் பதிவுகளை நான் உண்மையில் நேற்றோடு நிறைவு செய்ய நினைத்திருந்தேன்.

வித்வான் ஜெயந்த் அளித்த கச்சேரி பதிவாலும், Vishnuramprasad Vasudevan அனுப்பி வைத்த தமிழிசைச் சங்கக் கச்சேரி பதிவாலும் அது இன்னொரு நாள் நீண்டுவிட்டது. மகிழ்ச்சியை நீட்டித்தால் என்ன குறைந்துவிடப் போகிறது?

சில நாட்களுக்கு முன் குழலிசைக் கலைஞர் Flute J.A.Jayant அவர் தாத்தா டி.எஸ்.சங்கரனின் கச்சேரி பதிவை அனுப்பி வைத்திருந்தார். கலாசேத்ராவில் நடந்த அற்புதமான கச்சேரி.

அந்தக் கச்சேரியிலிருந்து ஒரு பகுதியை என் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளவும் அனுமதியளித்துள்ளார்.

பதிவுக்கான சுட்டி பின்னூட்டத்தில். முழுக் கச்சேரி கேட்க விரும்பின் யுடியூப் இணைப்பில் விவரங்களில் அந்த இணைப்பையும் வழங்கியுள்ளேன்.

வித்வான் ஜெயந்திற்கு இன்னொருமுறை நன்றி!

விஷ்ணுவுடன் நான் ‘மணி ஐயரும் முருகபூபதியும்’ என்று பேசிய உரையாடலை நீங்கள் என் யுடியூப் தளத்தில் பார்த்திருக்கக் கூடும். அதில் அவர் இந்தக் காம்போதி ராகப் பதிவை அன்று ஒலிக்கவிடத் திட்டமிட்டிருந்தாராம். நான் திருச்செந்தூர் கச்சேரியில் காம்போதி என்று மடைமாற்றியதும் இதை அன்று தவிர்த்துவிட்டார். அடுத்த நாள் எனக்கு இதை அனுப்பி வைத்தார். கேட்டதும் என்னால் இதைப் பகிராமல் இருக்க முடியவில்லை.

வயலின் வித்வான் மாயவரம் கோவிந்தராஜ பிள்ளையின் நினைவு தினம் சில நாட்கள் முன் (11-ம் தேதி) கடந்து போனது. துவாரம், ராஜமாணிக்கம் பிள்ளை, பாப்பா தலைமுறைக்கும் – லால்குடி, டி.என்.கிருஷ்ணன், எம்.எஸ்.ஜி தலைமுறைக்கும் இடையில் சிக்கி அதிகம் வெளியில் தெரியாத அற்புத வாசிப்பு கோவிந்தராஜ பிள்ளையினுடையது. பழைய ஸ்ருதி இதழின் நேர்காணல் ஒன்றில் தன்னைக் கவர்ந்த வாசிப்பென்று பிள்ளையின் வாசிப்பை மேதை லால்குடி சுட்டியிருப்பதையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

அவருடைய வாசிப்பின் நல்ல உதாரணமாகவும் இந்தப் பதிவை அணுகலாம்.

பதிவைக் கேட்டதும் முழுக் கச்சேரியும் இடக் கூடாதா என்று நீங்கள் நிச்சயம் கேட்பீர்கள். அதுவும் விரைவில் வரும்.

Vaak-ன் யுடியூப் தளத்தில் முழுக் கச்சேரியும் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான முன்னோட்டமாய் இந்தக் காம்போதியைக் கேட்டு மகிழுங்கள்.